தனித் தெலுங்கானா போராட்டம் உண்ணாவிரதத்தை கைவிட சந்திரசேகரராவ் மறுப்பு; கலவரத்தில் 103 பஸ்கள் எரிப்பு

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சந்திரசேகரராவ் மெதக் மாவட்டம் சித்திப்பேட்டையில் உண்ணா விரதம் தொடங்கினார். அவரை போலீசார் கைது செய்து கம்மம் சிறையில் அடைத்தனர். அங்கும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவர் கம்மம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சந்திரசேகரராவ் சிகிச்சை பெற மறுத்ததால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்த கோளாறு ஏற்பட்டதால் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.

இதையடுத்து மனித உரிமை ஆணைய நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவுப்படி சந்திரசேகர ராவ் ஐதராபாத் நிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்பட்டது. காய்ச்சலுக் கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. நுரையீரலில் தொற்று கிருமி இருந்ததால் அதை போக்க டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அவரது உடல்நிலை ஓரளவு தேறியது.

சந்திரசேகரராவ் இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் டாக்டர்கள் திட உணவு எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய-மாநில அரசுகள் உறுதி அளித்தால்தான் உண் ணாவிரதத்தை கைவிடுவேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதனால் டாக்டர்கள் அவருக்கு திரவ உணவை வலுக்கட்டாயமாக அளித்து வருகிறார்கள். குளுக்கோசும் ஏற்றப்படுகிறது.

சந்திரசேகரராவ் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் தெலுங்கானா பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. இதனால் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளி- கல்லூரிகளுக்கு 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கலவர பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக தெலுங்கானா பகுதியில் கலவரத்தில் 103 அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 22 அரசு அலுவலகங்களை தெலுங்கானா கட்சி தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர். 24 தனியார் பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 5392 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தெலுங்கானா கட்சி தொண்டர்கள் நேற்று இரவு ஐதராபாத் வந்த மந்திரிகள் பொன்னால லட்சுமய்யா, சுனிதா லட்சுமாரெட்டி ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து தொண்டர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இதே போல் ஐதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் வசிக்கும் தெலுங்கானா கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர். தெலுங்கானா தனி மாநிலம் அமைய பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்ற போராட வேண்டும், தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷ மிட்டனர்.

அப்போது அங்கு வந்த விஜயசாந்தி பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற போராடுவேன் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி, தொடர் உண்ணாவிரதம் இருக்கும் சந்திரசேகரராவுடன் மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதே போல் காங்கிரஸ் எம்.பி. அனுமந்தராவும் சந்திரசேகரராவுடன் பேசி தெலுங்கானா பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை மத்திய-மாநில அரசுகள் சார்பில் சந்திர சேகரராவுடன் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வில்லை. சந்திரசேகரராவ் 2 நாட்களுக்கு முன்பு கூறும்போது, கேபினட் அந்தஸ்துள்ள மத்திய மந்திரி யாராவது என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரலாம் என்று கூறி இருந்தார். ஆனால் மத்திய மந்திரி யாரும் அவரை சந்திக்க வரவில்லை.

இதனால் அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தெலுங்கானா கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் யாரும் வராததால் விரக்தி அடைந்தனர்.
1 1

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint