“9” எண் கூடுதலாக சேரும் செல்போன்களில் 11 இலக்கஎண்கள்; ஜனவரி 1 முதல் அமல்



புதுடெல்லி, டிச. 2-
செல்போன்களில் தற்போது 10 இலக்க எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் 10 இலக்க எண் போதாததாக உள்ளது. விரைவில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் நிலையில் உள்ளது. இது 2014-ம் ஆண்டு 100 கோடியை எட்டிவிடும் என்று கணித்து உள்ளனர். அப்போது 10 இலக்க எண்ணை பயன்படுத்தினால் எல்லோருக்கும் போன் எண் வழங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே 10 இலக்க எண்ணை 11 இலக்க எண்ணாக மாற்ற மத்திய டெலிபோன் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது உள்ள எண்ணுடன் முன் பகுதியில் கூடுதலாக “9” என்ற எண் சேர்க்கப்படும் என்று டெலிபோன் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது ஜனவரு மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தனர். ஆனால் இதுபற்றி டெலிபோன் நிறுவனங்களுக்கு இன்னும் டெலிபோன் துறை எந்த தகவலும் அனுப்பவில்லை.
10 இலக்க எண்ணை 11 இலக்கமாக மாற்றும் போது டெலிபோன் நிறுவனங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள 10 இலக்க எண்களுக்கு ஏற்றார் போல கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர்களை உருவாக்கி வைத்துள்ளனர். அதை 11 இலக்க எண்ணாக மாற்றும் போது புதிய சாப்ட்வேர்களை உருவாக்க வேண்டும். இதில் பல சிக்கல்கள் ஏற்படுவதுடன் பண செலவும் ஆகும் என்று டெலிபோன் நிறுவனங்கள் கூறுகின்றன.
மேலும் ஜனவரி 1-ந் தேதியே அமலுக்கு கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint