ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம்



Top world news stories and headlines detail

நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஒரே நாளில் பள்ளிக்குழந்தைகள் சென்ற 2 வேன்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஆசிரியைகள் உள்பட பள்ளிக்குழந்தைகள் 10 பேர் இறந்தனர். 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி ‌வந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.



நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மெகா மெட்ரிக்., மழலை பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. இந்‌நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் , எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.



ஆசிரியையும் பலி: இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் குழந்தைகள் பலரை உயிருக்கு போராடிய நிலையில் மீட்டுள்ளனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பல குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



மொபைல் பேசி வந்த வேன் டிரைவர் : இந்த ‌வேனை ஓட்டி வந்த டிரைவர் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்தார் என வேனில் இருந்த மாணவர்கள் கூறினர். ‌மொபைலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வளைவு வந்தது இதனையடுத்து வேனை திருப்பும்போது இந்த வேன் தடுமாறியது. இதில் கூடுதல் தகவல் ‌என்னவெனில் வேன் மிக பழையதாக இருந்தது. உரிய கண்டிஷனும் இல்லை என அங்கிருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். டிரைவரும், கிளீனரும் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



மருத்துவ பரிசோதனை செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு : இறந்த குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை ( போஸ்ட் மார்டம் ) செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துதான் கொடுப்போம் என மருத்துவர்களும், போலீசாரும் தெரிவித்து விட்டனர்.



நிவாரணம் அறிவிப்பு : இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும், ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



ஆத்தூரில் மற்‌றொரு விபத்து: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சென்ற பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். ஆத்தூர் அருகே சரஸ்வதி மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இதில் 18 பேர் தான் பயணிக்க முடியும். ஆனால் 30 ‌பேரை ஏற்றி சென்றுள்ளனர். நரிக்குறவன் காலனி அருகே நிலைதடுமாறிய வேன் தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். டிரைவர் உள்பட 5 பேர் நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமுற்றவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுதபடி நிற்கின்றனர்.



தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏதும் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு நிர்வாகம் உஷாராக இருந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள் சிக்கியது.

'Tamilish'

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint