1000 பேர் பலி; ஜனாதிபதி மாளிகை-வீடுகள் இடிந்தன அமெரிக்கா அருகே ஹைதி நாட்டில் பயங்கர நில நடுக்கம்





அமெரிக்கா அருகில் கரீபியன் கடல் பகுதியில் ஹைதி என்ற சிறிய நாடு உள்ளது. சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாடு தொடர் ராணுவபுரட்சிகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாகத்தான் இந்த நாடு ஐ.நா. சபை துணையுடன் பொருளாதார சீரமைப்புகளில் ஈடுபட்டுள்ளது.





இன்று (புதன்கிழமை) அதிகாலை இந்திய நேரப்படி 3.23 மணிக்கு அந்த நாட்டில் ஏற்பட்ட மிகப்பயங்கர நிலநடுக்கம் அந்த நாட்டையே புரட்டிப் போட்டுவிட்டது. அப்போது ஹைதி நாட்டு நேரம் செவ்வாய்க்கிழமை மாலை 4.53 மணியாகும். மக்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் “பிசி”யாக இருந்து கொண்டிருந்தனர்.





திடீரென ஹைதி நாடே அதிர்ந்தது. தலைநகர் போர்ட் -அவ்-பிரின்ஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியது. மக்கள் சுதாரிப்பதற்கு ஒரு வினாடி கூட அவகாசம் இல்லாத நிலையில் வீடுகள் எல்லாம் இடிந்து நொறுங்கி விழுந்தன.





நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்த மக்கள் அலறியபடி தெருக்களுக்கு ஓடினார்கள். அதற்குள் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 13 தடவை நில அதிர்வு ஏற்பட்டது. அதுவும் 3 நில அதிர்வுகள் மிக, மிக கடுமையாக இருந்தன. இதனால் மக்கள் மரணபீதியில் உறைந்து போனார்கள்.





முதலில் 3.23 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம் 7.3 ரிக்டர் அளவு கோலுக்கு பதிவாகி இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட 13 நில அதிர்வுகளில் 3 நில அதிர்வுகள் 5.9,5.5,5.1 ரிக்டர் அளவு கோல்களுக்கு பதிவாகி இருந்தது. பெரிய நில நடுக்கத்துக்கும் பிறகு ஏற்படும் தொடர்ச்சியான நில அதிர்வுகள் வழக்கமான சிறிய அளவில்தான் உணரப்படும்.





ஆனால் இன்று அதிகாலை ஹைதி நாட்டை பாடாய்படுத்தி விட்ட 13 நிலஅதிர்வுகளும், நில நடுக்கத்துக்கு இணையாக இருந்தன.





நில நடுக்கம் ஹைதி தலைநகர் போர்ட்- அவ்- பிரின்சில் இருந்து மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தரைக்குள் சுமார் 6 மைல் ஆழத்தில்தான் நிலநடுக்கம் மையப்புள்ளி இருந்தது. இதையடுத்து ஏற்பட்ட அடுத்தடுத்த நில அதிர்வுகளும் தலைநகருக்குள்ளும், தலைநகரை சுற்றியும் தோன்றின.





இதனால் ஹைதி நாட்டு தலைநகரம் துவம்சமாகிப் போனது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட போதே பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. அடுத்தடுத்த நில அதிர்வுகள், கீறல் விழுந்திருந்த வீடுகளை காலி செய்து விட்டன. இடியாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற அளவுக்கு போர்ட்- அவ்- பிரின்ஸ் நகரம் உருக்குலைந்து போய்விட்டது.





நில நடுக்கத்தின் கோரத்தாக்குதலுக்கு ஹைதி நாட்டு ஜனாதிபதி மாளிகையும் தப்பவில்லை. ஜனாதிபதி மாளிகையின் 60 சதவீத பகுதி நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவமாக ஹைதி ஜனாதிபதி ரேனி பிரிவல் காயமின்றி உயிர் தப்பினார்.





போர்ட்-அவ்-பிரின்ஸ் நகரின் முக்கிய மருத்துவமனையும் நொறுங்கி நாசமானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. வீடுகள், அலுவலகங்களின் இடிபாடுகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டனர்.





அவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. போர்ட்-அவ்-பிரின்ஸ் நகரின் தெருக்களில் மரண ஓலம் கேட்டபடி உள்ளது. இதுவரை இத்தகைய கோர நிலநடுக்க அனுபவத்தை அறியாத ஹைதி மக்கள் கையில் கிடைக்கும் ஆயு தங்களைக் கொண்டு மீட் புப் பணிகளில் இறங்கி உள்ளனர்.





நிலநடுக்கம் காரணமாக ஹைதி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பும், தகவல் தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹைதி நாட்டின் மற்ற சிறிய நகரங்களில் எத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவில்லை. தலைநகரில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.





கட்டிட இடி பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாதபடி பல ஆயிரம் உள்ளது. வீடுகளில் இருந்தும், அரசு அலுவலகங்களில் இருந்தும் காயத்துடன் மீட் கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை. இதனால் ஏரா ளனமானவர்கள் காப்பாற்றப்பட்டாலும் உயிருக்கு போராட வேண்டிய நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.





நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிறுவனமான பசிபிக்சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் வெளியிட்டது. ஹைதி, கியூபா, பஹாமாஸ், டோமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.





நிலநடுக்கத்தால் சீர்குலைந்துள்ள ஹைதி நாட்டில் ஐ.நா.ராணுவ வீரர்களாக சுமார் 200 இந்திய வீரர்கள் பணியில் இருந்தனர். அவர்களது கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக தூதரகம் எதையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.





ஹைதி நாட்டு நிலநடுக்கம் பற்றிய தகவல் அறிந்ததும், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்து கொடுக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். அமெரிக்காவில் இருந்து ராணுவ மீட்புக் குழுவினர் ஹைதிக்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





கட்டிட இடிபாடுகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகே எத்தனை ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது தெரியவரும். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஹைதி நாட்டுக்கு பல ஆயிரம் கோடி சொத்துக்கள் நாசமாகி கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint