சென்னையில் மேலும் ஒரு மோசடி நிறுவனம்: லட்சக்கணக்கில் சுருட்டிய போலீஸ் அதிகாரி மகள்; ஏமாந்தவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகை







சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி (22). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் இயங்கி வரும் ஜென் குரூப் நிறுவனத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், எங்கள் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்வதன் மூலம் மாதம் ரூ.3ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை மிகவும் சுலபமாக சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதை நம்பி அந்த நிறுவனத்துக்கு நான் நேரில் சென்றேன். அங்கிருந்தவர்கள் வேலைக்கு சேரும் முன்பு முன் பணம் செலுத்த வேண்டும் என்றனர். எவ்வளவு பணம் கட்டுகிறீர்களோ அவ்வளவு பணத்தை மாத வருமானமாக தருவதாக கூறினர்.
 
இதை நம்பி ரூ.65ஆயிரம் கட்டினேன். எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.65ஆயிரம் சம்பளம் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் கடந்த 3மாதங்களாக எனக்கு சம்பளம் எதுவும் தரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.
 
நான் அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். அது மூடப்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நான் கட்டிய பணத்தை வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இவரைப்போன்று பலர் ஜென் குரூப் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
 
பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, ஜென் குரூப் நிறுவனம் மீது கடந்த 5-ந்தேதி செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் இதுவரையிலும் நிறுவனத்தின் உரிமையாளர் வசந்த பிரபாவை போலீசார் கைது செய்யவில்லை. அவர் வடசென்னையில் பணிபுரியும் ஒரு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் மகள். அவர் மோசடி செய்த பணம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றனர்.
 
முன்னதாக இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. Tamilish

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint