மீண்டும் தெலுங்கானா போராட்டம்: “என் தலையை வெட்டி தற்கொலை செய்வேன்” சந்திரசேகரராவ் “திடீர்” மிரட்டல்

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என வற்புறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 
இதற்கு ஆந்திராவில் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒன்றுபட்ட ஆந்திராவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால் ஆந்திர மாநிலமே 2 ஆக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 


எனவே தெலுங்கானா மாநிலம் அமைக்க முதலில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு பின் வாங்கியது. இரு தரப்பையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக ஆந்திராவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
 
இதற்கிடையே தெலுங்கானா போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் அரசியல் கூட்டு போராட்டக்குழு மீண்டும் தீவிர போராட்டத்தை கையில் எடுத்து உள்ளது. அவர்கள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரதத்தை ஐதராபாத்தில் தொடங்கி உள்ளனர். வருகிற 28-ந்தேதி வரை உண்ணாவிரதம் நடக்கிறது.
 
28-ந்தேதிக்குள் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்து உள்ளனர். அதற்குள் அறிவிப்பு வராவிட்டால் ஆந்திராவே முற்றிலும் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டத்தை நடத்த போவதாக எச்சரித்து உள்ளனர்.
 
28-ந்தேதிக்கு பிறகு நடத்தப் போகும் போராட்டம் குறித்து கூட்டு போராட்டக்குழு உறுப்பினரும், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இப்போது நடத்தும் தொடர் உண்ணாவிரதம் ஒரு மவுன போராட்டம், எங்கள் கோரிக்கையை மத்திய அரசுக்கு உறுதியாக தெரிவிக்க இந்த உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறோம்.
 
28-ந்தேதி உண்ணா விரதப்போராட்டம் முடிவுபெறும். அதுவரை அமைதியாக இருப்போம். ஆனால் 28-ந்தேதிக்கு பிறகு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு போராட்டம் வேறு திசையில் செல்லும்.
 
தெலுங்கானா பகுதியில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர், தலைவரில் இருந்து எம்.எல்.ஏ., எம்.பி. வரை அத்தனை அரசியல் பதவிகளில் இருப்பவர்களும் பதவியை ராஜினாமா செய்வார்கள். அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். அவர்கள் வேலை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவார்கள். மக்கள் அரசுக்கு வரி செலுத்தமாட்டார்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் எதுவுமே செலுத்தமாட்டார்கள்.
 
தெலுங்கானா பகுதியில் அரசு பணிகள் எதுவுமே நடக்காது. முற்றிலும் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்வோம்.
 
அப்போதும் தெலுங்கானா மாநில அறிவிப்பை வெளியிடாவிட்டால் நான் எனது தலையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்வேன். அதாவது 28-ந் தேதிக்கு பிறகு ஒன்று தெலுங்கானா பிறக்கும், அல்லது நான் தற்கொலை செய்வேன். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடக்கும்.
 
எங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக நாங்கள் தெலுங்கானா மாநிலம் கேட்கவில்லை. ஆந்திராகாரர்களுக்கு இதுவரை அடிமையாக இருந்து கொண்டிருக்கும் நாங்கள் அதில் இருந்து விடுபட்டு கவுரவத்தோடு வாழவே தெலுங்கானா கேட்கிறோம்.



28-ந்தேதிக்கு பிறகு நடக்கும் போராட்டம்தான் உச்சகட்ட போராட்டம். இதற்கு மேல் எந்த போராட்டமும் கிடையாது. இப்போது தெலுங்கானாவை பெறாவிட்டால் 100 ஆண்டு ஆனாலும் தெலுங்கானா மாநிலம் அமைக்க முடியாது.
 
தெலுங்கானா போராட்டம் இப்போது எங்கள் கையில் இல்லை. மாணவர்கள் கைக்கு சென்றுவிட்டது. இப்போது பிறந்த குழந்தையில் இருந்து சாகிற நிலையில் இருக்கிறவர்கள் வரை தெலுங்கானா மாநிலம் வேண்டும் என்று விரும்புகின்றனர்.
 
எங்களை நக்சலைட்டுகள் என்று சிலர் விமர்சித்து உள்ளனர். நக்சலைட்டுகள் யார்? மக்களின் கண்ணீரில் இருந்துதான் நக்சலைட்டுகள் பிறக்கின்றனர். நாங்களும் கண்ணீருடன்தான் இருக்கிறோம். தெலுங்கானா மாநிலத்துக்காக நாங்களும் நக்சலைட்டுகளாக மாறுவோம்.
 
29-ந்தேதி என்ன நடக்கும் என்பதை எங்களாலே கூட சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்று கொண்டு இருக்கிறது.
 
நடிகர் ஜூனியர் என்.டி. ஆர். பற்றி என் மகள் கவிதா விமர்சனம் செய்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். ஆந்திரா பகுதியை சேர்ந்த பலரும் இதே போன்ற கருத்துக்களை சொன்னபோது அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாத அரசு என் மகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரை கைது செய்தால் ஆந்திராவில் கலவரம் வெடிக்கும்.
 
இவ்வாறு அவர் கூறினார். Tamilish

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint