பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயரும்? மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை



புதுடில்லி : பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், "பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்த வேண்டும்' என்ற, பெட்ரோலிய அமைச்சகத்தின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 4,100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், அரசு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்றவை நடப்பு நிதியாண்டில் 44 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்திக்க உள்ளன.இதில், சமையல் எரிவாயு மற்றும் கெரசின் விற்பனை மூலம் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் சரிக்கட்ட நிதியமைச்சகம் ஈடாக கடன் பத்திரம் தரும் நடைமுறை, சமீப காலமாக பின்பற்றப்படவில்லை.ஆகவே, எரிபொருள் மானிய நடைமுறையை மாற்றி சந்தை விலைக்கேற்ப விற்கும் ஒழுங்குமுறை உருவாக்கப்படுவது ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது.



அது இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என்று தெரியவில்லை.தற்போது இந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.3.06ம், டீசலுக்கு ரூ.1.56ம், கெரசினில் ரூ.17.23ம், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.299.01ம் இழப்பை சந்தித்து வருகின்றன. இருந்தும் பெட்ரோல், டீசல், கெரசின் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்படவில்லை.விலை உயர்வு அமலாகும் பட்சத்தில் ஏற்கனவே உணவுப் பொருட்கள் விலை உயர்வு உச்சத்தில் இருப்பது மேலும் அதிகரிக்கும். இது, பாமர மக்களை பெரிதும் பாதிக்கும். விவசாயத்திற்கு தேவைப்படும் டீசல் விலை அதிகரிக்கும்.எனவே, பொருளாதார பாதிப்பு குறித்த முடிவை எடுக்கும் போதே, அரசியல் ரீதியாக ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் அரசு ஆலோசிக்க கூடும். தற்போது பார்லிமென்ட் கூட்டம் நடைபெறவில்லை என்பதால், எதிர்க்கட்சிகள் கருத்து உடனடியாக பரவலாக வெளிவரவும் வாய்ப்பில்லை.



இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ஆகியோருடன் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்துகிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திட்ட கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா மற்றும் முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினரும், எரிபொருள் விலை தொடர்பான நிபுணர் குழுவிற்கு தலைமை வகிப்பவருமான கிரீத் எஸ்.பரேக்கும் பங்கேற்கின்றனர்.



பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்த வேண்டும் என, ஏற்கனவே பெட்ரோலிய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால் அதுபற்றியும், பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை படிப்படியாக கைவிடுவது, டீசலுக்கு வழங்கும் மானியத்தை படிப்படியாக குறைப்பது போன்றவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படலாம்.எண்ணெய் நிறுவனங்கள் வருவாய் இழப்பை பகிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம்.அதே நேரத்தில், எரிபொருள் விலை தொடர்பாக பரேக் கமிட்டின் பரிந்துரைகள் பற்றியும் ஆரம்ப கட்ட ஆலோசனைகள் நடக்கும் என, தெரிகிறது. பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அதுதொடர்பான அறிவிப்பும் இன்று உடனடியாக வெளியாகலாம். Tamilish

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint