ஐதராபாத் யாருக்கு என்பதில் இழுபறி: தெலுங்கானா உருவாகிறது; மத்திய அரசு முடிவு







ஆந்திராவில் இருந்து 10 மாவட்டங்களைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க போராட்டம்நடந்து வருகிறது. 
ஐதராபாத் நகரை தலைமை இடமாக கொண்டு தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெலுங்கானா பகுதி மாணவர்களும் தீவிரமாக உள்ளனர்.

அவர்களும் தனி அமைப்பு ஏற்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆந்திரா தலைவர்களை டெல்லிக்கு அழைத்து பேச்சு நடத்தினார்.
 
அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதிகளை சேர்ந்த 13 மாவட்ட தலைவர்கள், ஐக்கிய ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதால் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெலுங்கானா பகுதி தலைவர்கள் மத்திய அரசுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கத் தொடங்கி உள்ளனர்.
 
தெலுங்கானா தொடர்பான அறிவிப்பை வெளியிடாவிட்டால் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.
 
தெலுங்கானா விவகாரத்தில் 12-ந் தேதி மாலைக்குள் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெலுங்கானா கூட்டுப் போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவர் சந்திர சேகரராவ் சந்தித்துப் பேசினார்.
 
தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பிரதமரிடம் வலியுறுத்தினார். ஆனால் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் எந்த கருத்தும் சொல்ல மறுத்து விட்டார். என்றாலும் தெலுங்கானா தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சந்திரசேகரராவுக்கு திருப்தி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
 
ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆந்திரா-தெலுங்கானா தலைவர்கள் இரு அணிகளாகவே பிரிந்து விட்டதால், இனி அதை ஒட்ட வைக்க இயலாது என்று மத்திய அரசு தெலுங்கானாவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு ஆந்திரா தலைவர்களிடம் சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது. ஆந்திரா வளர்ச்சிக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்ற உறுதி மொழியுடன் சமரச பேச்சை மத்திய அரசு நடத்தி வருகிறது.
 
தெலுங்கானாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மாறி உள்ளதால் கடலோர ஆந்திரா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் சமரசத்தை அவர்கள் ஏற்பார்களா என்று தெரியவில்லை.
 
தெலுங்கானா பிரச்சினையில் மத்திய அரசுக்கு முன் உள்ள பெரும் தலைவலியாக ஐதராபாத் நகரம் உள்ளது. தெலுங்கானா தலைவர்கள் ஐதராபாத்தை விட்டுக் கொடுக்கவேமாட்டோம் என்று பிடிவாதமாக உள்ளனர்.
 
ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசு விரும்பவில்லை. அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு பொதுவாக சண்டிகார் அமைக்கப்பட்டதால் உண்டான பிரச்சினை இன்னும் தீரவில்லை. எனவே ஐதராபாத் நகரை தெலுங்கானாவுக்கு கொடுத்து விடவே மத்திய அரசு விரும்புகிறது.
 
அதற்கு பதில் விஜயவாடா, குண்டூர் நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tamilish

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint